Tuesday, July 20, 2010

வாழ்க்கை பாடம்

பதினைந்து ஆண்டுகள் பள்ளிப்படிப்பு முடித்து ஒரு பெருமைமிகு கல்லூரியில் பொறியியல் படிப்பை ஒரு வழியாக முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்தாயிற்று. இருந்தும் என்ன பயன் என்று நேற்று நான் யோசித்தேன். அதற்கு காரணம் நேற்று எனக்கு ஏற்பட்ட அனுபவம். நேற்று என் தந்தை ஒரு காசோலையை கொடுத்து ஒரு வங்கி கணக்கில் கட்டிவிட்டு வரும்படி சொன்னார். பேருந்து ஏதும் கிடைக்காததால் நடந்தே ஒரு வழியாக வங்கியை அடைந்தேன். விடுமுறை நாள் இல்லை என்பதால் வங்கியில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருந்தாலும் அங்கு இருந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையை மும்முரமாக செய்துகொண்டிருந்தார்கள். நான் காசோலையோடு இங்கும் அங்கும் விழித்தபடி என்ன செய்வதென்று அறியாமல் நின்று கொண்டிருந்தேன். வீடு, பள்ளி, கல்லூரி என்று இருந்துவிட்டமையால் இது போல வெளியில் சென்று சமூகத்திடம் எனக்கு அவ்வளவாக பழக்கம் கிடையாது. யாரிடமும் போய் உதவி கேட்கவும் தயக்கமாக இருந்தது. நேராக தந்தையை செல்பேசியில் அழைத்தேன். என்ன செய்யவேண்டும் ஏது செய்யவேண்டும் என்று கேட்டறிந்தேன். சலானை எடுக்கப்போக பல்வேறு நிறத்தில் சலான்கள் இருந்தன. மறுபடியும் சந்தேகம் வந்தமையால் தந்தையிடம் செல்பேசியில் பேசி சந்தேகத்தை தீர்த்துக்கொண்டேன். பின்பு ஒரு யூகத்தில் அந்த வெள்ளை நிற சலானை எடுத்து நிரப்பி முடிக்கின்ற நேரத்தில் அதில் கேட்டிருந்த ஒரு தகவல் எனக்கு தெரியவில்லை. என்ன செய்திருப்பேன்? ஆம். நீங்கள் நினைப்பது சரி தான். மறுபடியும் தந்தையின் செல்பேசியை மணி அடிக்க செய்தேன். நீ தவறான சலானை எடுத்து நிரப்பி இருக்கிறாய் என்று பதில் வந்தது. பின்பு ஒரு வழியாக மற்றொருவர் காசோலையுடன் வங்கிக்குள் நுழைவதைக்கண்டேன். அவர் செய்வதையே நாமும் செய்யலாம் என்று அவரை பின் தொடர்ந்தேன். என்னை என்னவென்று அவர் நினைத்தாரோ தெரியவில்லை. ஒரு மாதிரியாக பார்த்தார். அவர் பார்வையிலும் நியாயம் இருக்கின்றது. என்ன செய்வது? சமுதாயம் அவ்வளவு கெட்டுக்கிடக்கின்றது. அவர் எடுத்த சலானை போல நானும் ஒரு சலானை எடுத்து பூர்த்தி செய்து திரும்பிப்பார்க்கையில் அந்த நபரைக்கானவில்லை. சரி. இனி நாமாக முயற்ச்சிக்கலாமே என்று அந்த பெரிய வரிசையில் நின்றேன். வரிசையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வந்தது. எனக்கு முன்னாள் இன்னும் ஒருவர் தான். விவசாயியோ அல்லது கூலி வேலை செய்பவரோ போன்ற தோற்றத்தில் ஒருவர் என்னிடம் வந்து பேசினார். என்னப்பா? செக் ல இருந்து அக்கவுண்ட்ல பணம் போடணுமா? என்றார். ஆமாம் என்றேன். அதுக்கு ஏன் பா இங்க நிக்கிற? அந்த பெட்டில சலானை இணைத்து போடவேண்டும் என்று கூறினார். அடச்சே ! இது தெரியாம இவ்வளவு நேரம் நின்றிருந்தேனே என்று என்னை நானே நொந்துகொண்டு, அந்த யாரோ விடம் நன்றி கூறிவிட்டு என் வேலையே முடித்துவிட்டு வந்தேன். வரும்போது இதே யோசனை தான். என்னத்த படிச்சு என்ன செய்ய? ஒரு வங்கிக்கு சென்று ஒரு வேலையை சரியாக முடித்து வர தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். இது ஏதோ எனக்கு மட்டும் நடந்தது அல்ல. புத்தகப்பாடத்தை மட்டும் படித்துக்கொண்டு வாழ்க்கைப் பாடம் புரியாமல் சிரமப்படுபவர்கள் ஏராளம். செக்ஸ் கல்வி அவசியம் என்று கூக்குரல் இடுபவர்கள் இது போன்ற வாழ்க்கைக்கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று போராடினால் நன்றாக இருக்குமே. படித்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதில் எத்தனை பேருக்கு காய்கறி சந்தைக்கு சென்று சாமர்த்திய விலையில் காய்கறிகள் வாங்கி வரத்தேரியும்? எத்தனை பேருக்கு அங்கள் அலுவலகத்தில் ஏதோ ஒரு வேலையே சரியாக முடித்து வரத்தெரியும். பெற்றோர்களே! படி படி என்று புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொடுக்காதீர்கள். வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ளவும், சமூகத்தை தெரிந்து கொள்ளவும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

Saturday, July 10, 2010

நாங்கள் தான் இளிச்சவாயர்கள்!

சென்ற மாதம் கோவைக்கு சென்றிருந்தேன். அங்கு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. பேருந்தில் ஏறியதும் எனக்கு ஆச்சர்யம். நடத்துனர் இரண்டு ரூபாய் பயனச்சீட்டுக்களையும் வைத்திருந்தார். எனது ஊர் மதுரை. இங்கு நாங்கள் இரண்டு ரூபாய் பயணச்சீட்டை பார்த்து ஆண்டுகள் ஆகி விட்டது. தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தை முழுவதும் தமிழகம் தான் நடத்துகிறதா? என்று சந்தேகம் எழுகின்றது. பயணக்கட்டணம் மாநிலம் முழுவதும் ஒன்றாக தானே இருக்க வேண்டும். கோவையில் அந்த இரண்டு ரூபாய் பயச்சீட்டை வாங்கிக்கொண்டு அரைமணி நேரம் பேருந்து பயணம் செய்யமுடிந்தது. மதுரையில் நடை முறையில் உள்ள பயணக்கட்டணத்தை வெளிஊர்காரர்கள் அறிந்து கொள்ள இங்கு எழுதுகிறேன். குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாய். சாதாரண பேருந்துகளை மதுரையில் இப்போதெல்லாம் பார்க்கவே முடியாது. வெறும் ஒரு சதவிகித பேருந்துகள் மட்டுமே இன்னும் சாதாரண பேருந்துகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு சாதாரண பேருந்தில் 3 ரூபாய் கட்டணம். சிட்டி எக்ஸ்பிரஸ் என்று கூறப்படும் பேருந்துகளுக்கு 5 ரூபாய் கட்டணம். தாழ் தள சொகுசுப்பெருந்துகளுக்கு 7 ரூபாய் கட்டணம். பெரும்பாலும் தாழ்தள சொகுசுப்பெருந்துகள் தான் ஓடுகின்றது. நூற்றுக்கு என்பது சதவிகிதம் சொகுசுப்பெருந்துகள் தான் மதுரையில் ஓடுகின்றது. ஒரு பதினைந்து சிட்டி எக்ஸ்ப்ரஸ்கள் ஓடலாம். வெறும்  ஐந்து தான் சாதாரண பேருந்துகள் ஓடுகின்றன. அதையும் பண்டிகை போன்ற காலங்களில் சிட்டி எக்ஸ்ப்ரஸ் என்று ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி சிட்டி எக்ஸ்ப்ரஸ்களாக ஆக்கி விடுகின்றனர்.  ஆக 3 ரூபாயில் பயணம் செய்யவேண்டிய தூரத்தை மக்கள் 7 ரூபாய் கொடுத்து கடக்கவேண்டியிருக்கின்றது. சொகுசுப்பெருந்துகளும், சிட்டி எக்ஸ்ப்ரஸ்களும் சாதாரண பேருந்துகளைப்போல அனைத்து நிறுத்தங்களிலும் நின்று தான் செல்கின்றன. அது ஒரு புறம் இருக்கட்டும். நம் தமிழ் நாட்டில் அனைவரும் சொகுசு வாழ்க்கையா வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? சொகுசுப்பேருந்து வேண்டும் என்று இந்த ஆட்சியாளர்களிடம் யார் அழுதது? அரசுப்பேருந்துகளில் தான் இது போன்ற பகல் கொள்ளை நடக்கின்றது என்று தனியார் பேருந்துகளை எதிர்பார்க்கலாம் என்றால், சிற்றுந்து எனப்படும் மினி பஸ்களைத்தவிர மற்ற தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. அந்த சிற்றுந்துகளும் மிகவும் சொற்ப எண்ணிக்கைகளில் தான் ஓடுகின்றது. அந்த சிற்றுந்துகளின் பேருந்து நடத்துனர்களின் தொல்லையும் தாங்க முடியவில்லை. இரு வேறு நிறுவனங்களின் சிற்றுந்து பேருந்து நடத்துனர்கள் நடுரோட்டில் சண்டை இட்டுக்கொள்வதும் வாடிக்கை ஆகி விட்டது. ஏன் மாநிலம் முழுவதும் ஒரே போக்கை கடைபிடிக்கவில்லை? இந்த மக்கள் மட்டும் என்ன பாவம் செய்தவர்களா? நாங்கள் மட்டும் தான் இளிச்சவாயர்கள் போல.

Tuesday, July 6, 2010

பாரத் பந்த்

பாரத் பந்த் நேற்று ஒரு வழியாக நடந்து முடிந்தது. பல்வேறு எதிர் கட்சி தலைவர்களும் மக்களுக்காக (?) நேற்று பந்த் நடத்தியதாக சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அதனால் அவதிப்பட்டது பொதுமக்கள் தான் என்பது வேறு விஷயம். தமிழகத்திலும் பல்வேறு எதிர்கட்சி தலைவர்களும் தொண்டர்களும் ரயில் மறியல், பஸ் மறியல், போராட்டம் ஆர்பாட்டம் செய்ததற்காக கைது செய்து பின்பு விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் நாம் உற்று கவனிக்கவேண்டிய ஒன்று தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருப்பவர் நேற்று என்ன செய்தார் என்பது தான். முக்கிய எதிர்கட்சியின் பொதுச்செயலாளர் நேற்று ஏன் மக்களோடு மக்களாக, தொண்டர்களோடு தொண்டர்களாக வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டமோ, மறியலோ அல்லது வேறு எதுவுமோ செய்யவில்லை? ஒரு வேலை மற்றவர்களை போல நம்மையும் கைது செய்து விடுவார்கள் என்று பயமா? பெரும்பாலும் எந்த ஒரு போராட்டத்திலும் நேரடியாக கலந்து கொள்ளாத அவர் இப்பொழுது தான் சமீப காலமாக போராட்டம், ஆர்பாட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ள ஆரம்பித்து இருந்தார். இப்பொழுது அவருக்கு மறுபடியும் பயம் வந்து வீட்டிற்கு உள்ளேயே அடங்கி விட்டார் போலும். கொடநாட்டிலும், போயஸ் தோட்டத்திலும் சொகுசாக வாழ்பவர்களுக்கு நம்முடைய கஷ்டம் என்ன தெரியும்? ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை மேல் அறிக்கை விடத்தானே  தெரியும். எதிர்கட்சியைச் சாடுவதால் நான் ஆளும்கட்சியை மெச்சிக்கொண்டவன் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். தவறு எங்கு இருந்தாலும் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை தானே.