சென்ற மாதம் கோவைக்கு சென்றிருந்தேன். அங்கு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. பேருந்தில் ஏறியதும் எனக்கு ஆச்சர்யம். நடத்துனர் இரண்டு ரூபாய் பயனச்சீட்டுக்களையும் வைத்திருந்தார். எனது ஊர் மதுரை. இங்கு நாங்கள் இரண்டு ரூபாய் பயணச்சீட்டை பார்த்து ஆண்டுகள் ஆகி விட்டது. தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தை முழுவதும் தமிழகம் தான் நடத்துகிறதா? என்று சந்தேகம் எழுகின்றது. பயணக்கட்டணம் மாநிலம் முழுவதும் ஒன்றாக தானே இருக்க வேண்டும். கோவையில் அந்த இரண்டு ரூபாய் பயச்சீட்டை வாங்கிக்கொண்டு அரைமணி நேரம் பேருந்து பயணம் செய்யமுடிந்தது. மதுரையில் நடை முறையில் உள்ள பயணக்கட்டணத்தை வெளிஊர்காரர்கள் அறிந்து கொள்ள இங்கு எழுதுகிறேன். குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாய். சாதாரண பேருந்துகளை மதுரையில் இப்போதெல்லாம் பார்க்கவே முடியாது. வெறும் ஒரு சதவிகித பேருந்துகள் மட்டுமே இன்னும் சாதாரண பேருந்துகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு சாதாரண பேருந்தில் 3 ரூபாய் கட்டணம். சிட்டி எக்ஸ்பிரஸ் என்று கூறப்படும் பேருந்துகளுக்கு 5 ரூபாய் கட்டணம். தாழ் தள சொகுசுப்பெருந்துகளுக்கு 7 ரூபாய் கட்டணம். பெரும்பாலும் தாழ்தள சொகுசுப்பெருந்துகள் தான் ஓடுகின்றது. நூற்றுக்கு என்பது சதவிகிதம் சொகுசுப்பெருந்துகள் தான் மதுரையில் ஓடுகின்றது. ஒரு பதினைந்து சிட்டி எக்ஸ்ப்ரஸ்கள் ஓடலாம். வெறும் ஐந்து தான் சாதாரண பேருந்துகள் ஓடுகின்றன. அதையும் பண்டிகை போன்ற காலங்களில் சிட்டி எக்ஸ்ப்ரஸ் என்று ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி சிட்டி எக்ஸ்ப்ரஸ்களாக ஆக்கி விடுகின்றனர். ஆக 3 ரூபாயில் பயணம் செய்யவேண்டிய தூரத்தை மக்கள் 7 ரூபாய் கொடுத்து கடக்கவேண்டியிருக்கின்றது. சொகுசுப்பெருந்துகளும், சிட்டி எக்ஸ்ப்ரஸ்களும் சாதாரண பேருந்துகளைப்போல அனைத்து நிறுத்தங்களிலும் நின்று தான் செல்கின்றன. அது ஒரு புறம் இருக்கட்டும். நம் தமிழ் நாட்டில் அனைவரும் சொகுசு வாழ்க்கையா வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? சொகுசுப்பேருந்து வேண்டும் என்று இந்த ஆட்சியாளர்களிடம் யார் அழுதது? அரசுப்பேருந்துகளில் தான் இது போன்ற பகல் கொள்ளை நடக்கின்றது என்று தனியார் பேருந்துகளை எதிர்பார்க்கலாம் என்றால், சிற்றுந்து எனப்படும் மினி பஸ்களைத்தவிர மற்ற தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. அந்த சிற்றுந்துகளும் மிகவும் சொற்ப எண்ணிக்கைகளில் தான் ஓடுகின்றது. அந்த சிற்றுந்துகளின் பேருந்து நடத்துனர்களின் தொல்லையும் தாங்க முடியவில்லை. இரு வேறு நிறுவனங்களின் சிற்றுந்து பேருந்து நடத்துனர்கள் நடுரோட்டில் சண்டை இட்டுக்கொள்வதும் வாடிக்கை ஆகி விட்டது. ஏன் மாநிலம் முழுவதும் ஒரே போக்கை கடைபிடிக்கவில்லை? இந்த மக்கள் மட்டும் என்ன பாவம் செய்தவர்களா? நாங்கள் மட்டும் தான் இளிச்சவாயர்கள் போல.