பதினைந்து ஆண்டுகள் பள்ளிப்படிப்பு முடித்து ஒரு பெருமைமிகு கல்லூரியில் பொறியியல் படிப்பை ஒரு வழியாக முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்தாயிற்று. இருந்தும் என்ன பயன் என்று நேற்று நான் யோசித்தேன். அதற்கு காரணம் நேற்று எனக்கு ஏற்பட்ட அனுபவம். நேற்று என் தந்தை ஒரு காசோலையை கொடுத்து ஒரு வங்கி கணக்கில் கட்டிவிட்டு வரும்படி சொன்னார். பேருந்து ஏதும் கிடைக்காததால் நடந்தே ஒரு வழியாக வங்கியை அடைந்தேன். விடுமுறை நாள் இல்லை என்பதால் வங்கியில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருந்தாலும் அங்கு இருந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையை மும்முரமாக செய்துகொண்டிருந்தார்கள். நான் காசோலையோடு இங்கும் அங்கும் விழித்தபடி என்ன செய்வதென்று அறியாமல் நின்று கொண்டிருந்தேன். வீடு, பள்ளி, கல்லூரி என்று இருந்துவிட்டமையால் இது போல வெளியில் சென்று சமூகத்திடம் எனக்கு அவ்வளவாக பழக்கம் கிடையாது. யாரிடமும் போய் உதவி கேட்கவும் தயக்கமாக இருந்தது. நேராக தந்தையை செல்பேசியில் அழைத்தேன். என்ன செய்யவேண்டும் ஏது செய்யவேண்டும் என்று கேட்டறிந்தேன். சலானை எடுக்கப்போக பல்வேறு நிறத்தில் சலான்கள் இருந்தன. மறுபடியும் சந்தேகம் வந்தமையால் தந்தையிடம் செல்பேசியில் பேசி சந்தேகத்தை தீர்த்துக்கொண்டேன். பின்பு ஒரு யூகத்தில் அந்த வெள்ளை நிற சலானை எடுத்து நிரப்பி முடிக்கின்ற நேரத்தில் அதில் கேட்டிருந்த ஒரு தகவல் எனக்கு தெரியவில்லை. என்ன செய்திருப்பேன்? ஆம். நீங்கள் நினைப்பது சரி தான். மறுபடியும் தந்தையின் செல்பேசியை மணி அடிக்க செய்தேன். நீ தவறான சலானை எடுத்து நிரப்பி இருக்கிறாய் என்று பதில் வந்தது. பின்பு ஒரு வழியாக மற்றொருவர் காசோலையுடன் வங்கிக்குள் நுழைவதைக்கண்டேன். அவர் செய்வதையே நாமும் செய்யலாம் என்று அவரை பின் தொடர்ந்தேன். என்னை என்னவென்று அவர் நினைத்தாரோ தெரியவில்லை. ஒரு மாதிரியாக பார்த்தார். அவர் பார்வையிலும் நியாயம் இருக்கின்றது. என்ன செய்வது? சமுதாயம் அவ்வளவு கெட்டுக்கிடக்கின்றது. அவர் எடுத்த சலானை போல நானும் ஒரு சலானை எடுத்து பூர்த்தி செய்து திரும்பிப்பார்க்கையில் அந்த நபரைக்கானவில்லை. சரி. இனி நாமாக முயற்ச்சிக்கலாமே என்று அந்த பெரிய வரிசையில் நின்றேன். வரிசையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வந்தது. எனக்கு முன்னாள் இன்னும் ஒருவர் தான். விவசாயியோ அல்லது கூலி வேலை செய்பவரோ போன்ற தோற்றத்தில் ஒருவர் என்னிடம் வந்து பேசினார். என்னப்பா? செக் ல இருந்து அக்கவுண்ட்ல பணம் போடணுமா? என்றார். ஆமாம் என்றேன். அதுக்கு ஏன் பா இங்க நிக்கிற? அந்த பெட்டில சலானை இணைத்து போடவேண்டும் என்று கூறினார். அடச்சே ! இது தெரியாம இவ்வளவு நேரம் நின்றிருந்தேனே என்று என்னை நானே நொந்துகொண்டு, அந்த யாரோ விடம் நன்றி கூறிவிட்டு என் வேலையே முடித்துவிட்டு வந்தேன். வரும்போது இதே யோசனை தான். என்னத்த படிச்சு என்ன செய்ய? ஒரு வங்கிக்கு சென்று ஒரு வேலையை சரியாக முடித்து வர தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். இது ஏதோ எனக்கு மட்டும் நடந்தது அல்ல. புத்தகப்பாடத்தை மட்டும் படித்துக்கொண்டு வாழ்க்கைப் பாடம் புரியாமல் சிரமப்படுபவர்கள் ஏராளம். செக்ஸ் கல்வி அவசியம் என்று கூக்குரல் இடுபவர்கள் இது போன்ற வாழ்க்கைக்கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று போராடினால் நன்றாக இருக்குமே. படித்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதில் எத்தனை பேருக்கு காய்கறி சந்தைக்கு சென்று சாமர்த்திய விலையில் காய்கறிகள் வாங்கி வரத்தேரியும்? எத்தனை பேருக்கு அங்கள் அலுவலகத்தில் ஏதோ ஒரு வேலையே சரியாக முடித்து வரத்தெரியும். பெற்றோர்களே! படி படி என்று புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொடுக்காதீர்கள். வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ளவும், சமூகத்தை தெரிந்து கொள்ளவும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.