பதினைந்து ஆண்டுகள் பள்ளிப்படிப்பு முடித்து ஒரு பெருமைமிகு கல்லூரியில் பொறியியல் படிப்பை ஒரு வழியாக முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்தாயிற்று. இருந்தும் என்ன பயன் என்று நேற்று நான் யோசித்தேன். அதற்கு காரணம் நேற்று எனக்கு ஏற்பட்ட அனுபவம். நேற்று என் தந்தை ஒரு காசோலையை கொடுத்து ஒரு வங்கி கணக்கில் கட்டிவிட்டு வரும்படி சொன்னார். பேருந்து ஏதும் கிடைக்காததால் நடந்தே ஒரு வழியாக வங்கியை அடைந்தேன். விடுமுறை நாள் இல்லை என்பதால் வங்கியில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருந்தாலும் அங்கு இருந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையை மும்முரமாக செய்துகொண்டிருந்தார்கள். நான் காசோலையோடு இங்கும் அங்கும் விழித்தபடி என்ன செய்வதென்று அறியாமல் நின்று கொண்டிருந்தேன். வீடு, பள்ளி, கல்லூரி என்று இருந்துவிட்டமையால் இது போல வெளியில் சென்று சமூகத்திடம் எனக்கு அவ்வளவாக பழக்கம் கிடையாது. யாரிடமும் போய் உதவி கேட்கவும் தயக்கமாக இருந்தது. நேராக தந்தையை செல்பேசியில் அழைத்தேன். என்ன செய்யவேண்டும் ஏது செய்யவேண்டும் என்று கேட்டறிந்தேன். சலானை எடுக்கப்போக பல்வேறு நிறத்தில் சலான்கள் இருந்தன. மறுபடியும் சந்தேகம் வந்தமையால் தந்தையிடம் செல்பேசியில் பேசி சந்தேகத்தை தீர்த்துக்கொண்டேன். பின்பு ஒரு யூகத்தில் அந்த வெள்ளை நிற சலானை எடுத்து நிரப்பி முடிக்கின்ற நேரத்தில் அதில் கேட்டிருந்த ஒரு தகவல் எனக்கு தெரியவில்லை. என்ன செய்திருப்பேன்? ஆம். நீங்கள் நினைப்பது சரி தான். மறுபடியும் தந்தையின் செல்பேசியை மணி அடிக்க செய்தேன். நீ தவறான சலானை எடுத்து நிரப்பி இருக்கிறாய் என்று பதில் வந்தது. பின்பு ஒரு வழியாக மற்றொருவர் காசோலையுடன் வங்கிக்குள் நுழைவதைக்கண்டேன். அவர் செய்வதையே நாமும் செய்யலாம் என்று அவரை பின் தொடர்ந்தேன். என்னை என்னவென்று அவர் நினைத்தாரோ தெரியவில்லை. ஒரு மாதிரியாக பார்த்தார். அவர் பார்வையிலும் நியாயம் இருக்கின்றது. என்ன செய்வது? சமுதாயம் அவ்வளவு கெட்டுக்கிடக்கின்றது. அவர் எடுத்த சலானை போல நானும் ஒரு சலானை எடுத்து பூர்த்தி செய்து திரும்பிப்பார்க்கையில் அந்த நபரைக்கானவில்லை. சரி. இனி நாமாக முயற்ச்சிக்கலாமே என்று அந்த பெரிய வரிசையில் நின்றேன். வரிசையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வந்தது. எனக்கு முன்னாள் இன்னும் ஒருவர் தான். விவசாயியோ அல்லது கூலி வேலை செய்பவரோ போன்ற தோற்றத்தில் ஒருவர் என்னிடம் வந்து பேசினார். என்னப்பா? செக் ல இருந்து அக்கவுண்ட்ல பணம் போடணுமா? என்றார். ஆமாம் என்றேன். அதுக்கு ஏன் பா இங்க நிக்கிற? அந்த பெட்டில சலானை இணைத்து போடவேண்டும் என்று கூறினார். அடச்சே ! இது தெரியாம இவ்வளவு நேரம் நின்றிருந்தேனே என்று என்னை நானே நொந்துகொண்டு, அந்த யாரோ விடம் நன்றி கூறிவிட்டு என் வேலையே முடித்துவிட்டு வந்தேன். வரும்போது இதே யோசனை தான். என்னத்த படிச்சு என்ன செய்ய? ஒரு வங்கிக்கு சென்று ஒரு வேலையை சரியாக முடித்து வர தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். இது ஏதோ எனக்கு மட்டும் நடந்தது அல்ல. புத்தகப்பாடத்தை மட்டும் படித்துக்கொண்டு வாழ்க்கைப் பாடம் புரியாமல் சிரமப்படுபவர்கள் ஏராளம். செக்ஸ் கல்வி அவசியம் என்று கூக்குரல் இடுபவர்கள் இது போன்ற வாழ்க்கைக்கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று போராடினால் நன்றாக இருக்குமே. படித்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதில் எத்தனை பேருக்கு காய்கறி சந்தைக்கு சென்று சாமர்த்திய விலையில் காய்கறிகள் வாங்கி வரத்தேரியும்? எத்தனை பேருக்கு அங்கள் அலுவலகத்தில் ஏதோ ஒரு வேலையே சரியாக முடித்து வரத்தெரியும். பெற்றோர்களே! படி படி என்று புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொடுக்காதீர்கள். வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ளவும், சமூகத்தை தெரிந்து கொள்ளவும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
Ganesan's Blog
Tuesday, July 20, 2010
Saturday, July 10, 2010
நாங்கள் தான் இளிச்சவாயர்கள்!
சென்ற மாதம் கோவைக்கு சென்றிருந்தேன். அங்கு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. பேருந்தில் ஏறியதும் எனக்கு ஆச்சர்யம். நடத்துனர் இரண்டு ரூபாய் பயனச்சீட்டுக்களையும் வைத்திருந்தார். எனது ஊர் மதுரை. இங்கு நாங்கள் இரண்டு ரூபாய் பயணச்சீட்டை பார்த்து ஆண்டுகள் ஆகி விட்டது. தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தை முழுவதும் தமிழகம் தான் நடத்துகிறதா? என்று சந்தேகம் எழுகின்றது. பயணக்கட்டணம் மாநிலம் முழுவதும் ஒன்றாக தானே இருக்க வேண்டும். கோவையில் அந்த இரண்டு ரூபாய் பயச்சீட்டை வாங்கிக்கொண்டு அரைமணி நேரம் பேருந்து பயணம் செய்யமுடிந்தது. மதுரையில் நடை முறையில் உள்ள பயணக்கட்டணத்தை வெளிஊர்காரர்கள் அறிந்து கொள்ள இங்கு எழுதுகிறேன். குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாய். சாதாரண பேருந்துகளை மதுரையில் இப்போதெல்லாம் பார்க்கவே முடியாது. வெறும் ஒரு சதவிகித பேருந்துகள் மட்டுமே இன்னும் சாதாரண பேருந்துகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு சாதாரண பேருந்தில் 3 ரூபாய் கட்டணம். சிட்டி எக்ஸ்பிரஸ் என்று கூறப்படும் பேருந்துகளுக்கு 5 ரூபாய் கட்டணம். தாழ் தள சொகுசுப்பெருந்துகளுக்கு 7 ரூபாய் கட்டணம். பெரும்பாலும் தாழ்தள சொகுசுப்பெருந்துகள் தான் ஓடுகின்றது. நூற்றுக்கு என்பது சதவிகிதம் சொகுசுப்பெருந்துகள் தான் மதுரையில் ஓடுகின்றது. ஒரு பதினைந்து சிட்டி எக்ஸ்ப்ரஸ்கள் ஓடலாம். வெறும் ஐந்து தான் சாதாரண பேருந்துகள் ஓடுகின்றன. அதையும் பண்டிகை போன்ற காலங்களில் சிட்டி எக்ஸ்ப்ரஸ் என்று ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி சிட்டி எக்ஸ்ப்ரஸ்களாக ஆக்கி விடுகின்றனர். ஆக 3 ரூபாயில் பயணம் செய்யவேண்டிய தூரத்தை மக்கள் 7 ரூபாய் கொடுத்து கடக்கவேண்டியிருக்கின்றது. சொகுசுப்பெருந்துகளும், சிட்டி எக்ஸ்ப்ரஸ்களும் சாதாரண பேருந்துகளைப்போல அனைத்து நிறுத்தங்களிலும் நின்று தான் செல்கின்றன. அது ஒரு புறம் இருக்கட்டும். நம் தமிழ் நாட்டில் அனைவரும் சொகுசு வாழ்க்கையா வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? சொகுசுப்பேருந்து வேண்டும் என்று இந்த ஆட்சியாளர்களிடம் யார் அழுதது? அரசுப்பேருந்துகளில் தான் இது போன்ற பகல் கொள்ளை நடக்கின்றது என்று தனியார் பேருந்துகளை எதிர்பார்க்கலாம் என்றால், சிற்றுந்து எனப்படும் மினி பஸ்களைத்தவிர மற்ற தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. அந்த சிற்றுந்துகளும் மிகவும் சொற்ப எண்ணிக்கைகளில் தான் ஓடுகின்றது. அந்த சிற்றுந்துகளின் பேருந்து நடத்துனர்களின் தொல்லையும் தாங்க முடியவில்லை. இரு வேறு நிறுவனங்களின் சிற்றுந்து பேருந்து நடத்துனர்கள் நடுரோட்டில் சண்டை இட்டுக்கொள்வதும் வாடிக்கை ஆகி விட்டது. ஏன் மாநிலம் முழுவதும் ஒரே போக்கை கடைபிடிக்கவில்லை? இந்த மக்கள் மட்டும் என்ன பாவம் செய்தவர்களா? நாங்கள் மட்டும் தான் இளிச்சவாயர்கள் போல.
Labels:
bus,
charges,
coimbatore,
fare,
kovai,
madurai,
nadu,
pokkuvaraththu,
tamil,
tamilnadu,
tnstc,
transport,
travel
Tuesday, July 6, 2010
பாரத் பந்த்
பாரத் பந்த் நேற்று ஒரு வழியாக நடந்து முடிந்தது. பல்வேறு எதிர் கட்சி தலைவர்களும் மக்களுக்காக (?) நேற்று பந்த் நடத்தியதாக சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அதனால் அவதிப்பட்டது பொதுமக்கள் தான் என்பது வேறு விஷயம். தமிழகத்திலும் பல்வேறு எதிர்கட்சி தலைவர்களும் தொண்டர்களும் ரயில் மறியல், பஸ் மறியல், போராட்டம் ஆர்பாட்டம் செய்ததற்காக கைது செய்து பின்பு விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் நாம் உற்று கவனிக்கவேண்டிய ஒன்று தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருப்பவர் நேற்று என்ன செய்தார் என்பது தான். முக்கிய எதிர்கட்சியின் பொதுச்செயலாளர் நேற்று ஏன் மக்களோடு மக்களாக, தொண்டர்களோடு தொண்டர்களாக வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டமோ, மறியலோ அல்லது வேறு எதுவுமோ செய்யவில்லை? ஒரு வேலை மற்றவர்களை போல நம்மையும் கைது செய்து விடுவார்கள் என்று பயமா? பெரும்பாலும் எந்த ஒரு போராட்டத்திலும் நேரடியாக கலந்து கொள்ளாத அவர் இப்பொழுது தான் சமீப காலமாக போராட்டம், ஆர்பாட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ள ஆரம்பித்து இருந்தார். இப்பொழுது அவருக்கு மறுபடியும் பயம் வந்து வீட்டிற்கு உள்ளேயே அடங்கி விட்டார் போலும். கொடநாட்டிலும், போயஸ் தோட்டத்திலும் சொகுசாக வாழ்பவர்களுக்கு நம்முடைய கஷ்டம் என்ன தெரியும்? ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை மேல் அறிக்கை விடத்தானே தெரியும். எதிர்கட்சியைச் சாடுவதால் நான் ஆளும்கட்சியை மெச்சிக்கொண்டவன் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். தவறு எங்கு இருந்தாலும் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை தானே.
Wednesday, June 30, 2010
ஆண் உரிமை? பெண்ணுரிமை?
பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று கூறிக்கூறி இப்பொழுது ஆண் வர்கத்தின் உரிமை கேள்விக்குறி ஆகி விட்டது. ஈவ் டீசிங் என்று ஒரு சட்டம் இருக்கின்றது. ஆடம் டீசிங் என்று ஒரு சட்டம் இருக்கின்றதா? பெண்கள் மட்டும் என்று பேருந்துகள் இயக்கப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆண்கள் மட்டும் என்று பேருந்துகள் ஓடுவதாக இன்று வரை நான் பார்க்கவில்லை. நீங்கள் பார்த்திருந்தால் சொல்லுங்கள். பெண்களுக்காக மட்டும் என்று பலப்பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. ஆண்களுக்கு மட்டும் என்று இது வரை எந்த நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை. சமீபத்தில் தான் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் ஆண்களுக்காக மட்டும் என்று கண்ணில் பட்டது. இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கலாமே என்ற எண்ணத்தில் ஹிந்தி கற்றுக்கொள்ள அருகில் உள்ள ஒரு ஹிந்தி பயிற்ருவிக்கும் இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கு அவர்கள் சொன்ன பதில். "சாரி, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டும் தான் கற்றுத்தருவோம்" என்று. பண்டைய காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பது உண்மை தான். ஆனால் இப்பொழுது பெண்கள் எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள். இருந்தாலும் தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறிக்கூறி முதலைக்கண்ணீர் வடித்து தங்களின் தேவயைத்தீர்த்துக்கொள்கின்றார்கள் என்பது எனது கருத்து. ஒட்டு மொத்த பெண்களையும் குற்றம் சொல்வதாக என்ன வேண்டாம். நான் சொல்வது ஒரு சில பெண்களை மட்டும் தான். ஆண்களில் ஒரு சிலர் போக்கிலிகளாக இருப்பதை போன்று பெண்களிலும் ஒரு சிலர் இருக்கின்றார்கள் என்பது உண்மையே. எற்றுக்கொள்ளவேண்டியதும் கூட. ஆனால் பெண்கள் என்ற புனிதமான போர்வையால் அந்த ஒரு சிலர் மூடப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஆண்களின் உரிமையை பற்றி பேசுவதற்கும் நிறைய இருக்கின்றது. இப்படி மாறி மாறி பேசிக்கொண்டிருந்தால் விளைவு தான் என்ன? நேர விரயமும், நட்பு, ஒற்றுமை சீர்குலைவது மட்டும் தான். ஆண் உரிமை, பெண் உரிமை என்று தங்கள் தங்கள் உரிமையை நிலை நாட்டுவதில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக மனிதநேயத்தை வளர்ப்பதிலும், ஒற்றுமையை வளர்ப்பதிலும் நேரத்தை செலவிட்டால் அனைவரும் செழிப்புறலாம்.
Tuesday, June 29, 2010
நீதித்தராசு
சட்டம் அனைவருக்கும் சமம். சட்டத்திற்கு முன் அனைவரும் ஒன்று தான் என்று பல வாசகங்களை (வசனங்களை) கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன? வி.ஐ.பி என்று கூறப்படும் முக்கியப்புள்ளிகளுக்கு உள்ள சட்டமும் பாமரருக்கு உள்ள சட்டமும் ஒன்றாக உள்ளதா? சிறைச்சாலையில் கூட வி.ஐ.பி க்களுக்கு என்று அனைத்து வசதிகளும் நிறைந்த சிறைகள் உள்ளதாக கேள்விப்படுகிறோம். அப்படி அனைத்து வசதிகளும் உடைய இடத்திற்கு கொண்டு வந்து அரசுக்கு பண விரயத்தை ஆக்குவதற்கு பதிலாக அந்த வி.ஐ.பி க்களை வீட்டிலேயே விட்டு விடலாமே. வி.ஐ.பி க்கள் சிறைவாசத்தின் பொது மற்ற கைதிகளைப்போல சிறையினுள் வேலை கூட செய்வது கிடையாது. இது தான் நீதித்தராசின் லட்சணமா? சமீபத்தில் இந்து மத போதகர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதே போன்ற வழக்கு ஒரு பாமரன் மீது சுமத்தப்பட்டிருந்தால் அந்த பாமரனை இந்த சட்டம் என்னவெல்லாம் செய்திருக்கும்? ஆனால் அந்த மத போதகருக்கோ, உண்ண பழங்கள், அவர் விருப்பப்ப்படும்படியான உணவு என பல சௌகர்யங்களை செய்து கொடுத்திருக்கிறது. இந்த சௌகர்யங்களை மற்ற கைதிகளுக்கு ஏன் கொடுக்கவில்லை? பணம் விளையாடுகின்றது என்பதை மக்களுக்கு இப்படி தெளிவாக வெளியில் காட்டும் அளவுக்கு நம் நாடு வளர்ந்து விட்டது (?) மக்களால் என்ன செய்ய முடியும்? யார் கேள்வி கேட்பார்கள் என்ற உணர்வு. இந்த நிலைமை இன்னும் தொடர்ந்தால் இதன் விளைவு என்ன ஆகும் என்பது கணித்துப்பார்த்தாலே பயங்கரமாக இருக்கின்றது. தவறு செய்தவனும் தன் பண பலத்தைக்கொண்டு அனைத்து சௌகர்யங்களையும் அனுபவித்துக்கொண்டு சுக வாழ்வு வாழ்ந்துகொண்டிருப்பான். பாவப்பட்ட பாமரர்கள் செய்த குற்றத்திற்கோ செய்யாத குற்றத்திற்கோ உள்ளே வதைபட்டு, சிதைபட்டு வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டுருப்பர். நீதித்தராசு பணக்கட்டுகளின் பக்கம் சாய்ந்துகொண்டிருக்கின்றது என்பது அப்பட்டமாக தெரிகின்றது. விடிவு காலம் எப்பொழுதோ?
Labels:
aneedhi,
constitution,
injustice,
jail,
justice,
law,
needhi,
nithyanandha,
sattam,
sirai
Monday, June 14, 2010
ஆட்சியாளர்களே சிந்தியுங்கள்
இன்றைக்கு கோவைக்கு சென்றிருந்தேன். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டைப்பற்றி விளம்பரங்களை எங்கும் காண முடிந்தது. நான் சென்ற பேருந்தில் கூட செம்மொழி மாநாட்டுப்பாடலை அடிக்கடி ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நமது தமிழ் மொழிக்காக ஒரு உலகளாவிய மாநாடு நடக்கப்போகின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ் வளர்த்த மதுரையில் நடத்தினால் நன்றாக இருந்திருக்கும் என்ற அலை பலரிடம் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றது. எப்படியோ தமிழ் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நம் தமிழுக்கான, தமிழை பெருமை படுத்தக்கூடிய ஒரு விஷயம் நடந்தாலும் அது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை தரக்கூடிய ஒன்று தான். செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவை முழுவதும் பராமரிப்பு பணிகள் நடந்துகொண்டிருந்தது. நடைபாதை சீரமைப்பது, குப்பைகளை அகற்றி சீர் படுத்துவது என்று எங்கு பார்த்தாலும் நகரை சீர் செய்யக்கூடிய வேலை நடந்துகொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. செம்மொழி மாநாட்டை ஒட்டி உலகத்தின் பல இடங்களில் இருந்து கோவைக்கு மக்கள் வரும்போது நம் ஊரை அழகாக வைத்திருக்க வேண்டும் தான். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அங்கேயே வாழும் மக்களின் இது போன்ற அடிப்படை தேவைகளை மாநாட்டை அறிவித்த பிறகு தான் கவனித்திருக்கின்றது என்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மற்ற மாநிலத்தவர், மற்ற நாட்டவர் முன்பு நம் ஊர் அழகாக இருக்க வேண்டும் தான். ஆனால் இதே அக்கறையை மக்களின் மீதும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏதாவது மாநாடு, தலைவர்கள் வருகையின் பொது தான் மக்களின், அந்த ஊரின் அடிப்படை தேவைகளையும் கவனித்து அதை ஏற்படுத்திக்கொடுப்பது என்பது ஒரு ஆரோக்யமான அரசுக்கு அழகா? ஆட்சியாளர்கள் என்று கூறுவது தற்போதய ஆட்சியாளர்களை மட்டும் கூறுவதாக எண்ணிக்கொள்ள வேண்டாம். சமீப காலமாக ஏற்பட்ட மற்ற ஆட்சிகளும் இதே முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். எதில் ஒற்றுமையாக இருக்கிறார்களோ இல்லையோ, இது போன்ற விஷயத்தில் பெரும்பாலும் அனைத்து ஆட்சியாளர்களும் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருக்கின்றார்களே. மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மன நிலையை ஆட்சியாளர்கள் எப்போது பெறுவார்களோ? ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?
Thursday, June 10, 2010
கடவுள் வியாபாரம்
காலை நேரத்தில் டிவி ரிமோட்டில் சேனல் மாற்றும் விளையாட்டை விளையாடிப்பாருங்கள் . ஒவ்வொரு சேனலிலும் பலப்பல மதத்தாரும் பலப்பல சாமியார்களும் தங்கள் தங்கள் கடவுள்களைக் கூவிக் கூவி விற்றுக்கொண்டிருப்பார் . முக்காடு போட்டு பெண்களும் , கோட் சூட் போட்ட ஆண்களும் , மாலையும் கழுத்துமாய் சாமியார்களும் . இப்படிப் பலர் காவி , வெள்ளை , சிவப்பு என்று கலர் கலராய் தோன்றி தங்கள் கடவுளை எப்படியாவது பூலோகத்தை கைப்பற்ற வேண்டும் என்ற வெறியுடன் பாடி ஆடி கத்தி பலப்பல மொழிகளில் சமய வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள் . மதம் , கடவுள் இவை வியாபாரம் செய்யவேண்டிய ஒன்றா ? மக்களே திருந்துங்கள்.
வாஸ்தவமான வாஸ்து
வாஸ்து ஒரு கடல். அந்த கடலில் எந்த அலையும் தெரியாத அரை குறைகள் எல்லாம் இன்று ஊரையே பைத்தியம் ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
மனை அடி சாஸ்திரத்தில் 16 அடி மிகுந்த செல்வம், 12 அடி செல்வம் குழைந்து போகும் என்று போட்டிக்கும். இந்த அடி அங்குலம் என்பதெல்லாம் பின்னால் வந்த கணக்கு. எனவே, இந்த 16 அடி, 12 அடி என்பதெல்லாம் ஸ்கேல் அடி அல்ல. வீட்டு எஜமானர் கால் அடி. அவர் காலால் 16 அடி நடக்க அது தான் மனை அடி சாஸ்திரம் என்று ஒரு வாஸ்து நிபுணர் சொல்கிறார். 16 அடி ஸ்கேல் வைத்து கட்டியவன் கதி என்னாவது? இந்த தியரி உண்மை என்றல் அப்பா தனது காலடியில் 16 அடி பார்த்த வீட்டில் அப்பா இறந்து மகன் எஜமானன் அனால் வாழ முடியாதா? என்ற கேள்வி எழும். ஆனால் அப்பா பிள்ளை உடல் வாகு ஒரே மாதிரி இருக்க அதிக வாயப்பு உண்டு என்று வாஸ்து பதில் சொல்லும்.
வாஸ்து ஒரு சயின்ஸ். அதை நான் மறுக்க வில்லை. அதன் அறிவியல் கூறுகளை உணருவது அவசியம். ஒரு முக்கியமான விளக்கம். கேரளாவில் மலையாளத்தில் வாஸ்து நூல் உண்டு. அப்படியே அந்த்ராவில் கர்நாடகத்தில் அந்த அந்த மொழியில் எழுத பட்டுள்ளது அந்தரா வாஸ்துவை தமிழ்நாட்டில் அப்ளை பண்ணகூடாது. கேரளா வாஸ்து தமிழ் நாட்டுக்கு பொருந்தாது. சின்ன சின்ன வேறுபாடுகள் மண்ணின் தட்ப வெப்பம் , நீரோட்டம் , கடல் உயரம் காரணமாக ஏற்படும் இவையெல்லாம் உளறுகிற உள்ளூர் வஸ்துவுக்கு உரைக்கவா போகிறது ? தமிழ் நாட்டு வாஸ்து நிபுணர்கள் மேற்கே இருந்து கிழக்கே தண்ணீர் ஓட்டம் இருக்க வேண்டும் என்பார்கள் . ஏன் தெரியுமா ? நமது நதிகள் எல்லாம் மேற்கே உற்பத்தியாகி கிழக்கே வங்காள விரிகுடாக்கடலில் கலப்பவை . ஆனால் கேரளாவுக்கு இந்த வாஸ்து பொருந்தாது . அங்கே நதிகள் கிழக்கே உண்டாகி மேற்கே அரபிக்கடலில் கலக்கின்றன . அங்கு நீரோட்டம் கீழ் மேல் . தமிழ் நாட்டில் மேல் கீழ் . அது மாதிரியே மழை வெயில் கணக்கு பார்த்து வீடுகட்ட இலக்கணம் வகுத்தனர் முன்னோர்கள் . இப்போது எந்த தர்ம நியாமும் இல்லாத ப்ளாட்ஸ் வந்துவிட்ட பிறகு எதை அளவுகோலாய் வைத்து பேச ... எழுத ...?
பூமி வடகிழக்கில் சற்று சாய்ந்த நிலையில்சுழலுவதால் வடகிழக்கில் பாரம் கூடாது என்பது பொதுவான வாஸ்து . இந்தியாவில் வடக்கு நோக்கிய காந்த ஈர்ப்பு இருப்பதால் பூஜை அறை வடக்கு நோக்கி இருப்பது த்யனத்துக்கு நல்லது . இது இந்தியாவுக்கு பொருந்தும் . ரஸ்சியாவுக்கு பொருந்தாது . நம் உள்ளூர் வாஸ்து ரஷ்சியா போய் இதையே உளறுவது அசிங்கமாக இல்லையா ? வடக்கு ஞான திசை என்பதால் தெற்கு பார்த்து அலமாரி வைத்தால் கொஞ்சம் சில்லறை சேர சான்ஸ் உண்டு. இந்த யோசனை சீனாவுக்கு செல்லாது.
காற்றோட்டம், வெப்ப ஓட்டம், சூரிய உதயம், நீரோட்டம் இவற்றை கணக்கிட்டு வீடு கட்டுவது அவசியம். பூமியை தூண்டும்போது சக்தி அலை சரியாக துண்டடப்படுவது அவசியம். எல்லாவற்றையும் விட என்னத்தூயமையுடன் தருமம் சிதறாமல் வாழ்ந்தால் எந்த வீடும் நல்ல வீடு தான்.
பஞ்ச பாண்டவருக்கு வாஸ்து சாஸ்திரம் தோற்றுவித்த மாயன் கட்டிகொடுத்த மாளிகையில் பாண்டவர்கள் வாழ முடிந்ததா? 13 வருடம் காட்டிலும் மேட்டிலும் பிச்சை அல்லவா எடுத்தார்கள்? வாஸ்து அவர்களை வாழ விட்டதா? வாஸ்து சாஸ்திர பகவான் மாயனே கட்டினாலும் தருமத்துக்கு விரோதமாக சூதாடத் துணிந்ததால் சாஸ்திரத்தை விட தர்ம சாஸ்திரம் வலிமையானது. வாசலையும் ஜன்னலையும் மாற்றினால் துயரங்கள் தீராது. வாழ்வையும் எண்ணங்களையும் மாற்றுங்கள். வாஸ்தவமான வாஸ்து அதுதான்.
-சுகி சிவம்
Wednesday, June 9, 2010
பூச்சாண்டி காட்டாதீர்கள்
நம் அன்றாட நாளிதகழ்களையோ அல்லது செய்திகளையோ பார்த்தால் அதில் கண்டிப்பாக முக்கால் பகுதி பிடித்துக்கொள்வது அந்த தலைவர் இந்த தலைவர் மீது குற்றச்சாட்டு சாட்டினார், இவர் அவர் மீதி குற்றம் சுமத்தினார், ஆர்பாட்டம், போராட்டம் என்பது தான். ஆனால் நன்றாக யோசித்துப்பார்த்தால் இதனால் ஆகிவிடப்போவது ஒன்றும் இல்லை என்பது தெளிவாகத்தெரியும். இந்த தலைவர் அந்த தலைவர் மீதி குற்றம் சுமத்துகிறார் என்றால் அப்படி அந்த தலைவர் உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால் அதற்கு இந்த தலைவர் வழக்கு தொடரலாமே. இது ஒரு புறம் இருக்க, மக்களின் குறையை ஆதரித்து எதிர்கட்சிகள் செய்வது ஆர்பாட்டம், போராட்டம். இந்த இரண்டினால் பாதிக்கப்படுவது மறுபடியும் அதே பொது மக்கள் தானே. மக்களின் குறையை ஆளும் கட்சி தீர்த்து வைக்காததால் முழு அடைப்பு என்று போதாது குறைக்கு எதிர்கட்சி வேறு மக்களுக்கு துன்பம் தரும். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல. பாமர மக்கள் தங்கள் குறை தீர என்ன வழி என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும்போது, அதை எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் போக்கு தானே சமீபகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது? உண்மையிலேயே மக்களுக்கு நல்லவை செய்யவேண்டும் என்று எதிர் கட்சிகள் நினைத்தால், நுகர்வோர் நீதிமன்றம், நீதிமன்றம், தொண்டு அமைப்பு, மனித உரிமைகள் கழகம் என்று பல உள்ளனவே. அதில் எதை நாட வேண்டுமோ அதை நாடி மக்களுக்கு நன்மையை செய்திருக்கலாமே. ஏன் இப்படி மக்கள் மீது அன்பு இருப்பது போல பூச்சாண்டி காட்டுகிறார்கள்? அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற கூற்று உண்மையாவது எப்பொழுதோ!!!
காருக்குள் விஷ(ய)ம்
காருக்குள் இப்பொழுது பெரும்பாலும் ஏ.சி வைத்திருக்கிறார்கள். எனவே காரின் சன்னல்கள் எப்பொழுதும் மூடியே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தகவல் பெரிதும் உதவியாக இருக்கும். காருக்குள் சென்ற உடன் சன்னல்கள் அனைத்தையும் மூடிவிட்டு ஏ.சி போடுவதை தவிர்த்து விடுவது நல்லது. பூட்டிய காருக்குள் பென்சீன் எனப்படும் வாயு இருக்கும். அது விஷத்தன்மயானது. எனவே காருக்குள் சென்ற உடன் இரண்டு நிமிடங்களாவது சன்னல்களை திறந்து வைத்து விட்டு பிறகு மூடிக்கொள்வது உங்களின் உடல் நலனைக்காக்கும். விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படாமல் தடுக்கும். இது மருத்துவர்கள் தந்த தகவல்களாக இன்று ஒரு ஏட்டில் படித்தேன். உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவளைச்சொல்லுங்கள். உங்களுக்கு இல்லாவிட்டாலும், உங்கள் நண்பருக்கோ அல்லது அவரது நண்பருக்கோ இது பயனுள்ளதாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)