மின் வெட்டு!
இது கடந்த ஒரு ஆண்டாகவே அனைத்து தரப்பு மக்களையும் அதிருப்தி அடையச்செய்த ஒரு விஷயம். மின்சாரம் என்பது நமக்கு அவ்வளவு இன்றியமையாதது ஆகிவிட்டது. சென்ற வாரம் ஒரு குடிசை வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. நம்முடைய ஒரு படுக்கை அறையின் அளவு கூட இருக்காது அவர்களது மொத்த வீட்டின் அளவு. அந்த சிறிய இடத்திற்குள் தான் தூங்குவது, சமையல் அறை, உடை மாற்றும் அறை, பூஜை அறை, இன்னும் பல. குடிசைக்கு உள்ளே இருந்தே வானத்தை பார்க்கும் அளவிற்கு மேலே ஆங்காங்கே ஓட்டைகள். அரசாங்கத்தின் புண்ணியத்தில் இலவச மின்சாரம் கிடைத்த அந்த வீட்டில் ஒரு பல்பு மட்டும் தன்னால் முடிந்த அளவு வெளிச்சத்தை கக்கிக்கொண்டிருந்தது. ஆனால் இலவச மின்சாரம் கிடைகாததர்க்கு முன்னால் காத்து புகமுடியாத அளவு நெருக்கமாக இருந்த அந்த குடிசைப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் மின் விசிறி இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தால் அவர்களுடைய வாழ்க்கை நமக்கு புரியும். நம் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மூன்று மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் இருந்து வந்தது. அதற்கே நமக்கு எத்தனை கோவம். வடமாநிலங்களில் பதினாறு மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் இருக்கிறது என்று செய்தித்தாள் ஒன்றில் படித்து அதிர்ந்து போனேன். மின் வெட்டை மூன்று மணி நேரமே நம்மால் தாங்கமுடியவில்லை அவர்கள் பதினாறு மணி நேரம் எப்படித்தான் தாங்குகிறார்களோ, அங்கு எப்படி தான் நிறுவனங்கள் இயங்குகின்றனவோ என்று எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. தான் சுகமாக வாழ வேண்டும் என்பது தான் இப்போது உள்ள பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. இது தவறு என்று கூறமுடியாது. என்றாலும் மற்றவர்களையும் பற்றி சிந்திப்பதே மனித தன்மையாகும். என்றாலும் மனிதத்தன்மை இல்லாமல் மின் வெட்டுக்கான காரணத்தை ஆளுங்கட்சி எதிர்கட்சி மீதும் எதிர்கட்சி ஆளுங்கட்சி மீதும் தூக்கிப்போட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. எப்படியோ இந்த மின் வெட்டு என்பது பாமரர்களின் வாழ்க்கையை அனைவருக்கும் எடுத்துக்காட்டியிருக்கும் பாமரர்களின் வாழ்க்கையை அனைவரையும் மூன்று மணி நேரமாவது வாழ வைத்திருக்கும்.
என் அருமை மின் வெட்டுக்கு நன்றி.