ஒரு உண்மை சம்பவத்தை உங்களுக்காக எழுதுகிறேன். நானும் என் அண்ணனும் ஒரே பள்ளியில் படித்துக்கொண்டிருந்தோம். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது எனக்கு தினேஷ் என்ற நண்பன் இருந்தான். தினேஷின் அண்ணன் ராஜேஷ். ராஜேஷும் என் அண்ணனும் நண்பர்கள். நங்கள் படித்த பள்ளியில் ராஜேஷ் படிப்பில் முதல் மாணவராக இருந்தார். அனைத்து பாடங்களிலும் அனைத்து தேர்விலும் முதல் மதிப்பெண் அவர் தான் பெறுவார். தினேஷ் ராஜேஷின் சகோதரர்களின் தந்தை ஒரு காவல் துறை அதிகாரியாகப்பணி புரிந்தார். தந்தை காவலராக இருந்தாலும் அவர்களின் பிள்ளைகளான அந்த சகோதரர்கள் மிகவும் சாதுவானவர்களாக இருந்தார்கள். ராஜேஷும் பன்னிரெண்டாம் வகுப்பை நல்லபடியாக முடித்து மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் பிரிவை எடுத்தார(2003). இந்த நிலையில் ராஜேஷின் தந்தையார் காலமானார். அவர்களின் தாய்க்கு ராஜேஷும் தினேஷும் தான் கதி என்ற நிலை இருந்தது. ராஜேஷின் முதல் அரை ஆண்டும் முடிந்தது. இரண்டாம் அரை ஆண்டு முதல் அவரவர்களின் துறை வகுப்பிற்கு செல்வார்கள். ராஜேஷும் சென்றார். புதிய நண்பர்கள். பள்ளியை போலவே கல்லூரியிலும் நல்ல முறையில் பயின்று குடும்பத்தை காபற்றுவார் என்று ராஜேஷின் தாய் நினைத்து கொண்டிருந்தார். ஒரு நாள் மாலை ராஜேஷின் தாய்க்கு ஒரு போன் அழைப்பு. அதில் ஒரு தாங்கும் ஹோட்டலின் காப்பாளர் பேசினார். உங்கள் மகன் ராஜேஷ் எங்கள் ஹோட்டல் அறையை இன்று வாடகைக்கு எடுத்தார். சற்று நேரத்துக்கு முன்பு எங்கள் ஹோட்டல் அறையில் உங்கள் மகன் தனக்கு தானே எலெக்ட்ரிக் ஷாக் வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்பது அந்த காப்பாளரின் செய்தி. ராஜேஷின் தாய் கதறினார். ராஜேஷின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்த பின்பு கிடைத்த தகவல் இன்னும் கொடுமையானதாக இருந்தது. ராஜேஷின் குரல் பெண் குரல் போல இருப்பதாக உடன் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி கிண்டல் செய்தது தான் ராஜேஷின் தற்கொலைக்கு கரணம் என்று தெரிய வந்தது. அவர்களுடைய கிண்டலை தாங்க முடியாமல் ஏதோ ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று ஒரு ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தன உடம்பு முழுவதும் மின் வயர்களை சுற்றிக்கொண்டு தன் மீது மின்சாரத்தை பாய்ச்சி இறந்து விட்டார். எவ்வளவு கொடுமை பாருங்கள். அவரது மனம் எவ்வளவு பாடு பட்டிருந்தால் இப்படி ஒரு கொடுமையான தற்கொலையையும் தேர்ந்து எடுத்திருப்பார்.
மற்றவர்கள் மனதை புண் படுத்தி அதில் சுகம் காணும் இது போன்ற மாணவர்களை குற்றம் சொல்வதா?
இல்லை மற்றவர்களின் கேளிக்கைக்கு மரியாதை கொடுத்து தன் தாயையும் தம்பியையும் எண்ணிப்பார்க்காமல் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அந்த ராஜேஷை குற்றம் சொல்வதா?
இல்லை மாணாக்கரின் இது போன்ற செயல்களை முன்கூட்டியே கண்டு கண்டிக்காத தியாகராஜர் பொறியியற் கல்லூரியை குற்றம் சொல்வதா?
யாரை குற்றம் சொன்னாலும் ராஜேஷும் திரும்பி வரப்போவதில்லை. அந்த தாயின் கதறலுக்கு விடை கிடைக்கப்போவதும் இல்லை. இந்த சம்பவத்தை படித்த பின்பாவது இது போன்ற எண்ணம் இருக்கும் ஒரு சிலராவது திருந்துவார்கள் என்ற எண்ணத்தில் எழுதி இருக்கிறேன். நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் தான். ஆனால் இந்த விதத்தில் அல்ல.
இந்த நேரத்தில் அந்த ராஜேஷ் அன்னனனுடன் நான் கழித்த நேரங்களை, நாங்கள் விளையாடிய கிரிக்கெட்டையும் எண்ணிப்பார்க்கிறேன். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன். உங்களையும் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.