என் உடன் கல்லூரியில் நான்கு வருடம் படித்த, நான் ஆசையாய் தங்கை என்று அழைக்கும் அனுஷாவின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டிற்கு இன்று செல்லலாம் என்று நினைத்தேன். 14 .05 .2010 காலை 6 மணி. அனுஷாவை தொலைபேசியில் அழைத்து “நான் இன்று வரலாமா? அல்லது வெளி அலுவல்கள் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். அனுஷாவும் தன் அம்மாவிடம் கேட்டுவிட்டு இன்று வேறு அலுவல்கள் இல்லை. வரலாம் என்றும் கூறினார்கள். அதன் பின் புறப்படத்தயார் ஆனேன். அவர்கள் பகுதியில் காலை 9 மணி முதல் 12 மணி வரை மின் தடை இருப்பதால் 12 மணிக்கு மேல் அங்கு சென்று சேர்வது போல கிளம்பலாம் என்று நினைத்தேன். ஆனால் தங்கையின் அன்பு உத்தரவினால் 10 மணிக்கே அங்கு செல்வது என்று முடிவெடுத்தேன். “சட்டைய அயர்ன் பண்ணிட்டியா?” இது என் அம்மாவின் குரல். “இதோ பண்ணிட்ருகேம்மா” என்று கூறிக்கொண்டே சட்டையை அயர்ன் செய்துவிட்டு மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஜீன்ஸ் பேண்டையும் அணிந்து கொண்டு இரண்டொரு தோசையை வாயில் திணித்துக்கொண்டு பேருந்தை பிடிப்பதற்காக ஓடினேன். என் ஓட்டத்திற்கு பலனும் கிடைத்தது. ஒரு வழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தேன். “ஒரு பெரியார் பஸ் ஸ்டாண்ட் குடுங்க” – பெரியார் பஸ் ஸ்டாண்டையே வாங்குவது போன்ற தொனியில் நடத்துனரிடம் பத்து ரூபாயை நீட்டினேன். பத்து ரூபாயை பார்த்த உடனே முகத்தை சுளித்துக்கொண்டு “சில்ர இல்லையா பா. எல்லாரும் பத்து பத்து ரூபாயா நீட்னா நான் சில்றைக்கு எங்க போறது?” என்று அவரது ஆற்றாமையை என்னிடம் கொட்டி தீர்த்தார். “நாங்க என்ன சில்ர வைச்சுகிட்டா தாரமாட்றோம்” என்று எனக்குள் நினைத்துக்கொண்டு அவர் கொடுத்த கிழிந்த பயணச்சீட்டையும் கிழியாத ஐந்து ரூபா நோட்டையும் வாங்கிக்கொண்டேன். அனுஷாவின் வீட்டிற்குசென்று எப்படி நடந்து கொள்ள வேண்டும என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கும்போது மல்லிகைப்பூ சாக்கு மூட்டையுடன் மூன்று பேர் ஏறினார்கள். அவர்களின் கண்களில் அந்த காலையிலும் ஒரு களைப்பு . அதிகாலையிலே எழுந்து பூ சந்தைக்கோ வேறு எங்கோ சென்று திரும்பிக்கொண்டிருக்கக்கூடும். எல்லோரையும் போல “பாவம்” என்று நினைத்துக்கொண்டு அவர்களின் ருசிகர சைகை விளையாட்டை ரசிக்கத்தொடங்கினேன். பெரியார் பேருந்து நிறுத்தமும் வந்து விட்டது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் செல்ல வேண்டிய பேருந்துகள் எந்த நடைபாதை அருகில் வந்து நிற்கும் என்பது தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாமா என்று எண்ணிக்கொண்டு அருகில் இருந்த போக்குவரத்து அதிகாரியை நெருங்கினேன். அதற்குள் தகவல் பலகை ஒன்று கண்ணில் பட்டது. “பிளாட்பாரம் நம்பர்: 1 நிற்கும் பேருந்துகள்” என்று இருந்த அந்த தகவல் பலகையில் நான் செல்ல வேண்டிய பேருந்துகள் நிற்கும் என்ற செய்தி இருந்தது. இங்கு தான் நிற்கும் என்று உறுதிபடுத்திக்கொண்டு காத்திருந்தேன். வெகு நேரம் ஆனா பிறகும் நான் செல்ல வேண்டிய பேருந்துகள் ஒன்று கூட தென்படாததால் ஒரு சிறு சந்தேகம் எழத்தொடங்கிய நேரத்தில் அந்த பேருந்து வந்து நின்றது. கூட்டம் அதிகம் இல்லாததால் கொஞ்சம் நிம்மதியுடன் பேருந்தில் ஏறி பயணச்சீட்டை பெற்றுக்கொண்டேன். “ஹாஸ்பிட்டலுக்கு ரெண்டு ஸ்டாப் தள்ளி தான் அந்த ஸ்டாப்” என்று தந்தை சொல்லி அனுப்பியிருந்தது நினைவுக்கு வந்தது. ஹாஸ்பிடல் நிறுத்தத்தை கடந்த உடன் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் எது என்று தேடத்தொடங்கினேன். நடத்துனரிடமே கேட்டுவிடவேண்டியது தான் என்று முடிவு செய்து நடத்துனரின் இருக்கைக்கு அருகில் சென்று அமர்து கொண்டு “ஸ்டாப் எப்ப வரும்” என்று கேட்டேன். “ரெண்டு ஸ்டாப் தள்ளி. சொல்றேன்” என்று கூறிக்கொண்டே அவரது கணக்குகளை சரிபார்துக்கொண்டிருந்தார். ஒரு வழியாக நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்கி அவர்களின் வீட்டை சென்று அடைந்தேன். அனுஷாவும் அவரது(எங்களது) அம்மாவும் வரவேற்றார்கள். எங்கோ அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்த நேரத்திலும் “சும்மா ஜம்மு னு இருக்கார்ல” என்று தமாஷ் செய்து விட்டு கிளம்பினார் அப்பா.
…முற்றும்