Thursday, June 3, 2010

இடி மழை மின்னல்!

மின்னலின் தாக்கங்கள் பற்றி சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். பல பயனுள்ள தகவல்களை அதன் மூலம் அறிந்து கொண்டேன். "இடி விழுந்து இறந்து போய்டான்" என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் அது மின்னல் விழுந்து இறந்ததை தான் அப்படி சொல்கிறார்கள் நம் மக்கள். மின்னல் தாக்கி ஏற்படும் இறப்பை தவிர்க்க முடியாது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் எந்த ஒரு அழிவு இயற்கையினால் வருவதற்கு முன்பும் இயற்க்கை ஒரு எச்சரிக்கை செய்கிறது. நமக்கு தான் அது புரிவதில்லை. மின்னல் வருவதற்கு முன்பும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதைப்பற்றி தான் அந்த தொலைகாட்சியில் அந்த நிகழ்ச்சி இருந்தது. அதில் வழங்கப்பட்ட தகவல்களை இங்கு உங்களுக்கு தருகிறேன். மின்னல் தாக்கவிருக்கும் இடத்தில் நாம் இருந்தால் மின்னல் தாக்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு நம்முடைய கைகளில் இருக்கும் முடிகள் நேராக எழுந்து நிற்க ஆரம்பிக்கும். அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டால் அந்த இடத்தை விட்டு உடனே அகல வேண்டும். அப்படிப்பட்ட இடத்தில் கூட்டமாக இருப்பதையும் தவிர்க்கவேண்டும். மின்னல் நமக்கு அருகில் தாக்கும் பட்சத்தில் தரையோடு தரையாக உட்கார்ந்து விடுவது நல்லது. உட்காரும்போது இரு கைகளும் காதுகளை மூடியவாறு இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். பாதத்தின் முன் பகுதி மட்டும் தரையில் படுவது போல உட்கார வேண்டும். மார்புப்பகுதி காலோடு ஒட்டி இருக்க வேண்டும். அதாவது நம் உடலை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவரை மின்னல் தாக்கி இருந்தால் அவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் கொடுத்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது.