பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று கூறிக்கூறி இப்பொழுது ஆண் வர்கத்தின் உரிமை கேள்விக்குறி ஆகி விட்டது. ஈவ் டீசிங் என்று ஒரு சட்டம் இருக்கின்றது. ஆடம் டீசிங் என்று ஒரு சட்டம் இருக்கின்றதா? பெண்கள் மட்டும் என்று பேருந்துகள் இயக்கப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆண்கள் மட்டும் என்று பேருந்துகள் ஓடுவதாக இன்று வரை நான் பார்க்கவில்லை. நீங்கள் பார்த்திருந்தால் சொல்லுங்கள். பெண்களுக்காக மட்டும் என்று பலப்பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. ஆண்களுக்கு மட்டும் என்று இது வரை எந்த நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை. சமீபத்தில் தான் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் ஆண்களுக்காக மட்டும் என்று கண்ணில் பட்டது. இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கலாமே என்ற எண்ணத்தில் ஹிந்தி கற்றுக்கொள்ள அருகில் உள்ள ஒரு ஹிந்தி பயிற்ருவிக்கும் இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கு அவர்கள் சொன்ன பதில். "சாரி, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டும் தான் கற்றுத்தருவோம்" என்று. பண்டைய காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பது உண்மை தான். ஆனால் இப்பொழுது பெண்கள் எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள். இருந்தாலும் தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறிக்கூறி முதலைக்கண்ணீர் வடித்து தங்களின் தேவயைத்தீர்த்துக்கொள்கின்றார்கள் என்பது எனது கருத்து. ஒட்டு மொத்த பெண்களையும் குற்றம் சொல்வதாக என்ன வேண்டாம். நான் சொல்வது ஒரு சில பெண்களை மட்டும் தான். ஆண்களில் ஒரு சிலர் போக்கிலிகளாக இருப்பதை போன்று பெண்களிலும் ஒரு சிலர் இருக்கின்றார்கள் என்பது உண்மையே. எற்றுக்கொள்ளவேண்டியதும் கூட. ஆனால் பெண்கள் என்ற புனிதமான போர்வையால் அந்த ஒரு சிலர் மூடப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஆண்களின் உரிமையை பற்றி பேசுவதற்கும் நிறைய இருக்கின்றது. இப்படி மாறி மாறி பேசிக்கொண்டிருந்தால் விளைவு தான் என்ன? நேர விரயமும், நட்பு, ஒற்றுமை சீர்குலைவது மட்டும் தான். ஆண் உரிமை, பெண் உரிமை என்று தங்கள் தங்கள் உரிமையை நிலை நாட்டுவதில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக மனிதநேயத்தை வளர்ப்பதிலும், ஒற்றுமையை வளர்ப்பதிலும் நேரத்தை செலவிட்டால் அனைவரும் செழிப்புறலாம்.