Wednesday, June 9, 2010

பூச்சாண்டி காட்டாதீர்கள்

நம் அன்றாட நாளிதகழ்களையோ அல்லது செய்திகளையோ பார்த்தால் அதில் கண்டிப்பாக முக்கால் பகுதி பிடித்துக்கொள்வது அந்த தலைவர் இந்த தலைவர் மீது குற்றச்சாட்டு சாட்டினார், இவர் அவர் மீதி குற்றம் சுமத்தினார், ஆர்பாட்டம், போராட்டம் என்பது தான். ஆனால் நன்றாக யோசித்துப்பார்த்தால் இதனால் ஆகிவிடப்போவது ஒன்றும் இல்லை என்பது தெளிவாகத்தெரியும். இந்த தலைவர் அந்த தலைவர் மீதி குற்றம் சுமத்துகிறார் என்றால் அப்படி அந்த தலைவர் உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால் அதற்கு இந்த தலைவர் வழக்கு தொடரலாமே. இது ஒரு புறம் இருக்க, மக்களின் குறையை ஆதரித்து எதிர்கட்சிகள் செய்வது ஆர்பாட்டம், போராட்டம். இந்த இரண்டினால் பாதிக்கப்படுவது மறுபடியும் அதே பொது மக்கள் தானே. மக்களின் குறையை ஆளும் கட்சி தீர்த்து வைக்காததால் முழு அடைப்பு என்று போதாது குறைக்கு எதிர்கட்சி வேறு மக்களுக்கு துன்பம் தரும். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல. பாமர மக்கள் தங்கள் குறை தீர என்ன வழி என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும்போது, அதை எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் போக்கு தானே சமீபகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது? உண்மையிலேயே மக்களுக்கு நல்லவை செய்யவேண்டும் என்று எதிர் கட்சிகள் நினைத்தால், நுகர்வோர் நீதிமன்றம், நீதிமன்றம், தொண்டு அமைப்பு, மனித உரிமைகள் கழகம் என்று பல உள்ளனவே. அதில் எதை நாட வேண்டுமோ அதை நாடி மக்களுக்கு நன்மையை செய்திருக்கலாமே. ஏன் இப்படி மக்கள் மீது அன்பு இருப்பது போல பூச்சாண்டி காட்டுகிறார்கள்? அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற கூற்று உண்மையாவது எப்பொழுதோ!!!