இன்றைக்கு கோவைக்கு சென்றிருந்தேன். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டைப்பற்றி விளம்பரங்களை எங்கும் காண முடிந்தது. நான் சென்ற பேருந்தில் கூட செம்மொழி மாநாட்டுப்பாடலை அடிக்கடி ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நமது தமிழ் மொழிக்காக ஒரு உலகளாவிய மாநாடு நடக்கப்போகின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ் வளர்த்த மதுரையில் நடத்தினால் நன்றாக இருந்திருக்கும் என்ற அலை பலரிடம் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றது. எப்படியோ தமிழ் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நம் தமிழுக்கான, தமிழை பெருமை படுத்தக்கூடிய ஒரு விஷயம் நடந்தாலும் அது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை தரக்கூடிய ஒன்று தான். செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவை முழுவதும் பராமரிப்பு பணிகள் நடந்துகொண்டிருந்தது. நடைபாதை சீரமைப்பது, குப்பைகளை அகற்றி சீர் படுத்துவது என்று எங்கு பார்த்தாலும் நகரை சீர் செய்யக்கூடிய வேலை நடந்துகொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. செம்மொழி மாநாட்டை ஒட்டி உலகத்தின் பல இடங்களில் இருந்து கோவைக்கு மக்கள் வரும்போது நம் ஊரை அழகாக வைத்திருக்க வேண்டும் தான். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அங்கேயே வாழும் மக்களின் இது போன்ற அடிப்படை தேவைகளை மாநாட்டை அறிவித்த பிறகு தான் கவனித்திருக்கின்றது என்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மற்ற மாநிலத்தவர், மற்ற நாட்டவர் முன்பு நம் ஊர் அழகாக இருக்க வேண்டும் தான். ஆனால் இதே அக்கறையை மக்களின் மீதும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏதாவது மாநாடு, தலைவர்கள் வருகையின் பொது தான் மக்களின், அந்த ஊரின் அடிப்படை தேவைகளையும் கவனித்து அதை ஏற்படுத்திக்கொடுப்பது என்பது ஒரு ஆரோக்யமான அரசுக்கு அழகா? ஆட்சியாளர்கள் என்று கூறுவது தற்போதய ஆட்சியாளர்களை மட்டும் கூறுவதாக எண்ணிக்கொள்ள வேண்டாம். சமீப காலமாக ஏற்பட்ட மற்ற ஆட்சிகளும் இதே முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். எதில் ஒற்றுமையாக இருக்கிறார்களோ இல்லையோ, இது போன்ற விஷயத்தில் பெரும்பாலும் அனைத்து ஆட்சியாளர்களும் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருக்கின்றார்களே. மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மன நிலையை ஆட்சியாளர்கள் எப்போது பெறுவார்களோ? ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?