லஞ்சம் என்பது இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதிகாலை மார்க்கெட் பகுதியில் போலீசாரால் வியாபாரிகளிடம் வாங்கப்படும் லஞ்சத்தை, ஒவ்வொரு சாலை சிக்னலிலும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வாங்கப்படும் லஞ்சத்தை, லஞ்சம் வாங்கிக்கொண்டபிறகு தான் புகாரை பதிவு செய்யும் காவல் நிலையங்களை, அரசு அலுவலகங்களில் வாங்கப்படும் லஞ்சத்தை, லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதும் நீதிபதிகளை(!), அரசியல்வாதிகள் வாங்கும் லஞ்சத்தை இது வரை எந்த ஒரு லஞ்ச ஒழிபபுத்துறையினரும் காணவில்லையா? லஞ்சத்தை முழுவதுமாக ஒழிக்க முதலில் சிறிய அதிகாரிகளிடம் இருந்து ஒடுக்க வேண்டுமா அல்லது உயர்மட்டத்தில் இருந்து ஒழிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று அனைவரும் யோசித்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில் லஞ்சமாக வாங்கும் பணம் அதிகரித்துக்கொண்டு தானே இருக்கின்றது. சாமானியரால் என்ன செய்ய முடியும்? இது தான் நம் கேள்வியாக இருக்கின்றது. லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று ஒரு முறையாவது சொல்லி இருக்கிறோமா அல்லது லஞ்சத்தை பற்றி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகாராவது தெரிவித்து இருப்போமா? நம் சுயநலத்திற்காக நாம் நலமாக இருந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய வாரிசுகளுக்கு நாம் எப்படிப்பட்ட உலகத்தை விட்டு செல்கிறோம் என்று எண்ணுபவர்களுக்கு என்னுடைய கருத்தும் புரியும்.