Tuesday, June 29, 2010

நீதித்தராசு

சட்டம் அனைவருக்கும் சமம். சட்டத்திற்கு முன் அனைவரும் ஒன்று தான் என்று பல வாசகங்களை (வசனங்களை) கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன? வி.ஐ.பி என்று கூறப்படும் முக்கியப்புள்ளிகளுக்கு உள்ள சட்டமும் பாமரருக்கு உள்ள சட்டமும் ஒன்றாக உள்ளதா? சிறைச்சாலையில் கூட வி.ஐ.பி க்களுக்கு என்று அனைத்து வசதிகளும் நிறைந்த சிறைகள் உள்ளதாக கேள்விப்படுகிறோம். அப்படி அனைத்து வசதிகளும் உடைய இடத்திற்கு கொண்டு வந்து அரசுக்கு பண விரயத்தை ஆக்குவதற்கு பதிலாக அந்த வி.ஐ.பி க்களை வீட்டிலேயே விட்டு விடலாமே. வி.ஐ.பி க்கள் சிறைவாசத்தின் பொது மற்ற கைதிகளைப்போல சிறையினுள் வேலை கூட செய்வது கிடையாது. இது தான் நீதித்தராசின் லட்சணமா? சமீபத்தில் இந்து மத போதகர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதே போன்ற வழக்கு ஒரு பாமரன் மீது சுமத்தப்பட்டிருந்தால் அந்த பாமரனை இந்த சட்டம் என்னவெல்லாம் செய்திருக்கும்? ஆனால் அந்த மத போதகருக்கோ, உண்ண பழங்கள், அவர் விருப்பப்ப்படும்படியான உணவு என பல சௌகர்யங்களை செய்து கொடுத்திருக்கிறது. இந்த சௌகர்யங்களை மற்ற கைதிகளுக்கு ஏன் கொடுக்கவில்லை? பணம் விளையாடுகின்றது என்பதை மக்களுக்கு இப்படி தெளிவாக வெளியில் காட்டும் அளவுக்கு நம் நாடு வளர்ந்து விட்டது (?) மக்களால் என்ன செய்ய முடியும்? யார் கேள்வி கேட்பார்கள் என்ற உணர்வு. இந்த நிலைமை இன்னும் தொடர்ந்தால் இதன் விளைவு என்ன ஆகும் என்பது கணித்துப்பார்த்தாலே பயங்கரமாக இருக்கின்றது. தவறு செய்தவனும் தன் பண பலத்தைக்கொண்டு அனைத்து சௌகர்யங்களையும் அனுபவித்துக்கொண்டு சுக வாழ்வு வாழ்ந்துகொண்டிருப்பான். பாவப்பட்ட பாமரர்கள் செய்த குற்றத்திற்கோ செய்யாத குற்றத்திற்கோ உள்ளே வதைபட்டு, சிதைபட்டு வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டுருப்பர். நீதித்தராசு பணக்கட்டுகளின் பக்கம் சாய்ந்துகொண்டிருக்கின்றது என்பது அப்பட்டமாக தெரிகின்றது. விடிவு காலம் எப்பொழுதோ?