Sunday, June 6, 2010

சூரியன் நாளை முதல் மேற்கில் உதிக்கும்

மீடியா எனப்படும் செய்தி தொடர்புத்துறைக்கு எனது வேண்டுகோளாக இதைப்பதிவு செய்கிறேன்.
உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு செய்தி தொடர்பு துறை வழியாகத்தான் கிடைக்கிறது. "ஆங்கோர் அநியாயம் நடந்தது" என்பதை நாம் கண்கூடாக நேரடியாக பார்ப்பதில்லை. பத்திரிக்கையிலோ அல்லது தொலைக்காட்சி, வானொலி செய்திகளின் மூலமாகவே அறிந்துகொள்கிறோம். நம் நண்பர் சொல்லி கூட நம்பாத ஒன்றை பத்திரிகை செய்திகள் கூறினால் உடனே நம்பிவிடுகிறோம். "சூரியன் நாளை முதல் மேற்கில் உதிக்கும்" என்று பத்திரிகையில் செய்தி வந்தால் என்ன, ஏது, எப்படி என்று கூட ஆராயாமல் அடுத்தநாள் மேற்கில் இருந்து உதிக்கப்போகும் சூரியனை பார்க்க குடும்பத்தோடு மொட்டை மாடியில் அதிகாலையிலே காத்திருக்கும் ஆட்கள் தான் நாம். அப்படி நம் அறிவுக்குள் ஒன்றிப்போன செய்தித்துறை அதன் கடமையைச் சரியாக செய்கின்றதா என்பது கேள்விக்குறி தான். ஒரு சில செய்தி நிறுவனங்கள் தங்கள் கடமையைச் செவ்வனே செய்தி வருகிறதென்பதும் மறுப்பதற்கில்லை. கடமையைச்சரியாக செய்யும் செய்தி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் வெறும் வியாபார நோக்கத்திற்காகவே செய்தி நிறுவனங்களை நடத்தி வருபவர்களை கண்டிக்க வேண்டியதும் நமது கடமையாக இருக்கிறது. பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் வியாபாரம் கருதியே செய்திகளை வெளியிடுகின்றன. தற்போது உள்ள சூழலில் எந்த செய்தியை வெளியிட்டால் நிறைய லாபம் கிடைக்கும் என்று மட்டுமே சிந்திப்பவர்களாக நிறுவன தலைமை அலுவலர்கள்  இருக்கின்றார்கள். உயர்மட்டத்தில் உள்ளவர்கள் செய்யும் அநியாய அக்கிரமங்களை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் சில நாட்கள் கழித்து அப்போதைக்கு எந்த செய்தியை வெளியிட்டால் அதிக லாபம் கிடைக்குமோ அது போன்ற செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்றனர். சில காலம் கழித்து முன்பு வெளியிட்ட அந்த அக்கிரமத்தை பற்றிய செய்தியே வராமல் போய்விடுகின்றது. உதாரணமாக லலித் மோடி, நித்தியானந்தா, ஈழத்தில் தமிழர்களின் நிலை, கேத்தன் தேசாய் போன்ற விவகாரங்களை ஒரு வாரமோ பத்து நாளோ முக்கியச்செய்தியாக வெளியிடுவார்கள். அதன் பிறகு அது என்னவாயிற்று என்று கூட தெரியாது. செய்தித்துறையின் மூலம் மக்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டுமானால் ஒரு விவகாரம் எழுந்தால் அது முழுமையாக முடியும் வரை செய்தித்துறை அந்த விவகாரத்தை துரத்திக்கொண்டே இருக்கவேண்டும். செய்தித்துறையின் பார்வை விலகாதவரை அந்த விவகாரங்கள் அரசியல் குறுக்கீடு இல்லாமல் ஓரளவு நேர்மையாக நடத்தப்படும். எனவே வியாபாரத்திற்காக மட்டும் இல்லாமல் மக்களின் தேவையை உணர்ந்து மக்களின் தோழனாக செய்தித்துறை பணியாற்ற வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது.